தமிழிசை செளந்தரராஜனுக்கு இணையாகவோ, அவருக்கு அடுத்தப்படியாகவோ தமிழகத்தில் பாஜகவை வளர்த்ததில் வானதி சீனிவாசனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பொது பிரச்சனைகளை முன்னிறுத்தி பாஜக மேற்கொள்ளும் போராட்டங்களிலும் சரி… ஊடக விவாதங்களிலும் சரி… தனது பளிச்சிடும் கீச் குரலால் பாஜகவை தூக்கி பிடித்து வருவதன் மூலம் தமிழக அரசியலில் தனி கவனம் பெறுகின்றவர் வானதி மேடம்.
உலக நாயகன் கமல் ஹாசனை தோற்கடித்தவர் என்ற பெருமையுடன் கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கின்ற இவர், பாஜக தேசிய மகளிர் அணி தலைவராகவும் பதவி வகிப்பதால் இந்திய அளவிலும் அரசியலில் கவனத்தை ஈர்த்து வருகிகின்றார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக பாஜகவில் மற்றொரு உயர் பதவி வானதியை விரைவில் தேடி வர இருக்கிறது.
சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது, மாநில முதல்வர்களை நியமிப்பது போன்ற மிகவும் முக்கிய முடிவுகளை எடுத்து வரும் உயர் நிலை குழுவான பாஜகவின் மத்திய பார்லிமென்டரி குழுவில் வானதி சீனிவாசனுக்கு விரைவில் இடம் கிடைக்க இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான இக்குழுவின் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி என தற்போது மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் இக்குழுவி்ல் மேலும் ஒரு உறுப்பினரை சிறப்பு விருந்தினராக சேர்க்க பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டாவும் முடிவு செய்திருக்கின்றனர்.
இந்த சிறப்பு விருந்தினர் பெண் உறுப்பினராக இருந்தால் நன்றாக இருக்கும் என அமித் ஷா யோசனை தெரிவிக்க, இந்த பதவியை பெறும் அதிர்ஷ்டம் வானதி சீனிவாசனுக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பாஜக மத்திய பார்லிமென்டரி குழு உறுப்பினராக விரைவில் நியமிக்கப்பட இருக்கின்ற வானதி மேடம், அதன் பிறகு கட்சி அலுவல் ரீதியாக வட மாநிலங்களுக்கு தொடர்ந்து பயணிக்க வேண்டி இருக்கும் என்பதாலும், பல்வேறு மாநிலங்களின் கட்சித் தலைவர்களுடன் அவ்வபோது உரையாட வேண்டி வரும் என்பதாலும் ஹிந்தியை அவர் ஆர்வமுடன் கற்று வருவதாக பெருமையுடன் கூறுகின்றன கமலாலய வட்டாரங்கள்.