நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது. எனவே தண்ணீரின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். கடந்த 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள், சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். உலகத்தில் 97. 5 சதவீதம் உப்புச் சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2. 5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2. 24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0. 26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
மக்களின் தேவையை இந்தத் தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும்.
தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்