Categories
அரசியல்

வானிலை கணிப்பு துல்லியமாக வேண்டும்…. எதற்காக தெரியுமா?…. இதோ விரிவான விளக்கம்…..!!!!!

உலகளவில் தொழில் செய்பவர்களில் 80 சதவீதம் பேர் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்தியாவில் 94 சதவீதம் பேர் பருவ நிலையை நம்பியே வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏராளமானோர் பருவநிலையை நம்பி இருக்கும்போது, நமக்கு என்ன தேவைகள் இருக்கின்றன, தற்போது உள்ள சேவைகள் நம் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை ஆகும்.

இதனிடையில் சாலையில் போகும் வாகனத்தின் எண்ணைக்கூட இந்திய செயற்கைக் கோள்களால் துல்லியமாகப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டாலும், ஒரு மாவட்டத்தின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும் என்று துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியவில்லை. பொதுவாகவே ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இன்று வானிலை முன் அறிவிப்பு செய்யப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாளில் மாவட்டம் முழுவதிலும் மழை பெய்கிறதா என்றால் இல்லை. அதாவது ஒரு கிராமத்தில் மழை பெய்தால் அடுத்த கிராமத்தில் பெய்வதில்லை. இதன் காரணமாக என்ன பாதிப்பு நேர்ந்துவிடப்போகிறது..? என்பது குறித்து உதாரணங்களைப் பார்ப்போம்.

அந்த வகையில் அறுவடைக்கு  முன்னதாக அதிக மழை பெய்யும் அல்லது அதிக வெப்பம் ஏற்படும் என்று விவசாயிகளுக்குத் துல்லியமாக எச்சரிக்கை கொடுக்கப்படுவதில்லை. இதனிடையில் பயிர் விளையும் நேரத்தில் அதிக மழை பெய்தால் பயிர்களில் அழுகல் நோய் வரலாம், அவை தொற்றுக்கு உள்ளாகலாம் அல்லது சாய்ந்தே விடலாம். அறுவடைக்குப் பின் நெற்பயிர்களைக் காய வைக்கும் போதோ வித்து வகைகளைக் காய வைக்கும் போதோ திடீரென்று மழை பெய்தால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்பார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வர மடம் அருகே தென்பெண்ணை ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலத்தில் விவசாயிகள் நெல்லைக் காய வைத்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து அரை மணி நேரம் கழித்து அந்த இடத்துக்குத் திரும்பிச் சென்றபோது மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது பல்வேறு இடங்களில் இருந்த விவசாயிகள் ஓடிவந்தும் நெல்லை கூட்டவும் முடியாமல், முழு தார்பாலின் போடவும் முடியாமல் தவித்தது இதுவரையிலும் மனதில் பதிந்துள்ளது. அந்தப் பாலத்தில் காயப்போடப்பட்டிருந்த நெல் முழுவதும் நனைந்த நிலையில் அது சந்தையில் முழு விலைக்குப் போகுமா என்று தெரியாது.

ஒருசிறு பாலத்திலேயே சில ஆயிரமோ, லட்சங்களோ நஷ்டமாகும்போது மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும், நாடு முழுவதும் எவ்வளவு நஷ்டப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே 3 முதல் 6 மாதங்கள் வரை உழைத்து உருவாக்கிய பயிரை நாளை பணமாக்கி விடலாம் என்று கனவோடு இருக்கும் போது, மழையோ அதிவெப்பமோ வந்து 100 சதவீதம் நஷ்டமானால் யார் விவசாயம் செய்வார்கள்..? இப்படி அறுவடைக்குப் பின் உள்ள பொருட்களின் சேதம் மட்டும் வருடத்துக்கு ரூபாய் 65,000 கோடி என்று ஆய்வறிக்கைகள் சுட்டுகின்றன. ஆனால் யாருடைய செவிகளுக்கும் அது எட்டவேயில்லை.

இதற்கிடையில் கால்நடை வளர்ப்போருக்கும் அதே நிலைமைதான். திடீரென்று பெய்யும் மழையால் கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுபோக முடியாமல் தவிக்கும் விவசாயிகள் பலருக்கு மழை மட்டுமல்ல மிதமிஞ்சிய வெப்பமும் பிரச்சினைதான். வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவோருக்குத் திடீர் மழையால் நேரும் நஷ்டத்தை நாம் கணக்கிடவே முடியாது. இதனை தவிர கனிமத் துறை, சுற்றுலா, போக்குவரத்து என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் கணிப்பில்லாத மழையும் வெப்பமும் தொழிலுக்குப் பெரும் பாதிப்பை விளைவிக்கும்.

இன்று மழை பெய்யும் என்று கூறும் நமது கைபேசிச் செயலிகள், வானிலை அறிவிப்புகள் ஏதும் சாதாரண மனிதர்களுக்கு இதுவரையிலும் துல்லியமான தகவல்களைச் சொல்வதில்லை. வானிலை மாற்றம் குறித்து நமக்கு 100 சதவீதம் துல்லியமாக வேண்டாம், ஒரு 75 சதவீதமாவது  துல்லியமாகக் கொடுத்தால்கூடப் போதுமானது. ஏன்னென்றால் பருவநிலை மாறும்போது வானிலையும் மாறும். ஆகவே நமக்கு துல்லியமான தகவல்களைக் கொடுக்கும் தொழில்நுட்பம் மிகவும் அவசியம் ஆகும். அமெரிக்கா ஆகிய நாடுகளில் துல்லியமான வானிலைத் தகவல்கள் கொடுக்கும்போது உலகத்திற்கே மென்பொறியாளர்களைக் கொடுக்கும் இந்தியாவால் அது முடியாதா..? என்று கேள்வி எழுந்துள்ளது.

காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்றின் வேகம், ஈரப்பதம், மழையின் வேகம் ஆகியவற்றையும் வானிலை முன் அறிவிப்புகள் உள்ளடக்க வேண்டும். தற்போது நம்மிடையே தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். வானிலை முன் அறிவிப்பு தொடர்பான பயிற்சிகளை நாம் மாவட்டவாரியாகக் கொடுத்தே ஆக வேண்டும். ஏனென்றால் மொத்தமாக மாநில வானிலை தெரிவித்தால் மாவட்டம் வாரியாக நம்மை எச்சரிக்க மாவட்டந்தோறும் ஆர்வலர்கள் பலர் தேவை. அதனையே வேலை வாய்ப்பாகக்கூட அறிவிக்கலாம். தமிழகம் வெதர் மேன் ஒரு தன்னார்வலராக இது குறித்து முக்கியமான பங்களிப்பு செய்கிறார். வேறு சில பேரும் அவ்வப்போது தகவல் கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் பணியாற்ற இன்னும் பலர் தேவை, அவர்களுக்கு அரசே பயிற்சி அளித்து நிர்வகிக்கலாம்.

அதனை தொடர்ந்து மற்றொருபுறம் நம்முடைய நாட்டின் வானிலை அறிக்கையைத் அறிந்துக்கொள்ள பிற நிறுவனங்களுக்கு பணத்தை கொடுத்து அதை வாங்கவேண்டிய தேவையுள்ளது. நமது வானிலை தொடர்பாக அரசு அறிவிக்கையில் அவற்றிற்காக நாம் தனியாக செலவு செய்ய வேண்டியது இல்லை. தற்போது தொழில்நுட்பங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. ஆனால் அந்தத் தொழில்நுட்பங்கள் இதுவரையிலும் கடைக்கோடியில் உள்ள மனிதர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. விவசாயத்தின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று வானிலை அறிவிப்பு தான். இதனை தொழில்நுட்ப நிறுவனங்களும் உணர வேண்டும் என்று தொழில்நுட்ப ஆலோசகர் செல்வமுரளி கூறியுள்ளார்.

Categories

Tech |