ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் முறியடிப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்று அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை, துரை, திருச்சி, மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசு தனிச் சட்டம் ஒன்றை இயற்றியது.
ஆனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 25 ஆயிரம் வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. இதனால் இந்த வழக்குகள் தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே எந்தவித நிபந்தனையும் இன்றி வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.