ஸ்கூட்டர் வாய்க்காலுக்குள் பாய்ந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பகுதியில் எலக்ட்ரீசியனான சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சுமித்ரா 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் ஓட்டைகுளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் சதீஷ்குமாரும், சுமித்ராவும் துணி துவைப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளனர்.
அப்போது வாய்க்கால் கரையோரம் ஒரு பாம்பு குறுக்கே சென்றதைப் பார்த்து சதீஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதனால் நிலைதடுமாறிய ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து நீந்தி கரைக்கு வந்த சதீஷ்குமார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சுமித்ராவை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுமித்ராவின் சடலத்தை கைப்பற்றினர்.
அதன்பிறகு காவல்துறையினர் சுமித்ராவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் சுமித்ராவின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.