Categories
அரசியல்

“வாய் புளித்ததோ… மாங்காய் புளித்ததோ!” -ஸ்கோர் செய்த திமுக … கோட்டைவிட்ட அதிமுக!

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை என விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சி என்றாலே 110 விதியில் எல்லாம் வரிசையாக அறிவிப்பாக செய்து கொண்டு வந்தார்கள். அவர்களே அறிவித்த  537 அறிவிப்புகளுக்கு  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் போட்டுள்ளவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் அதிமுக அரசில் 110விதியின் கீழ் சொன்ன 348 அறிவிப்புகளுக்கு ஆணைகள் வெளியிட்டார்கள். ஆனால் நிதி ஒதுக்கீடு முழுமையாக செய்யவில்லை, ஓரளவுக்கு செய்து விட்டு  அப்படியே விட்டுவிட்டார்கள்.  அந்தப் பணிக்கு அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அடுத்து 143 அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரு சல்லி காசு கூட அதற்கு நிதி ஒதுக்கவில்லை. 20 அறிவிப்புகளுக்கு ஆணையும் வெளியிடவில்லை, அதற்கான நிதி ஒதுக்கீடும் சொல்லவில்லை, அப்படியே நிலுவையில் போட்டு  விட்டார்கள்.

26 அறிவிப்புகள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. காரணம் எப்படி இந்த அறிவிப்புகளை அறிவித்தார்கள் என்பது கூட தெரியாமல், எந்த விதமான ஒரு அடிப்படையான புரிதல்,தகவல் கூட இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு,  அந்த 26 அறிவிப்புகளையும் கைவிட்டு இருக்கிறார்கள்.

அதிமுக அரசில் 110விதியில் சொன்ன 537 அறிவிப்புகளையும் இன்றைக்கு நிலுவையாக வைத்துவிட்டு, கைவிடப்பட்டு இருக்கக்கூடிய அறிவிப்புகளாக வைத்துவிட்டு எல்லாவற்றையும் நிறைவேற்று கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை பார்த்து அவர் சொல்வது என்பது எள்ளி நகையாடியது ஓன்று. அவர் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக திமுக மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார்.

நேற்று முதலமைச்சர் சொன்னதை அவர் ஒழுங்காக கேட்டு இருந்தால் அவருக்கு இந்த ஐயப்பாடு வந்திருக்காது. ஆனால் கேட்டிருப்பார்… கேட்டுக்கொண்டு வேண்டும் என்றே அதை திரித்து சொல்லியிருக்கிறார். திமுக அரசை பொறுத்தவரை சொல்லி இருக்க கூடிய 505 வாக்குறுதிகளில் மாநில ஆளுநர் அறிக்கையின் வாயிலாக 53 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட இருக்கிறது.

முதலமைச்சருடன் பதில் வாயிலாக இரண்டு வாக்குறுதிகள், நிதிநிலை அறிக்கை வாயிலாக 43 வாக்குறுதிகள், வேளாண்மை நிதி நிலை அறிக்கை வாயிலாக 23 வாக்குறுதிகள், அமைச்சர்களின் அறிவிப்பு வாயிலாக 64 வாக்குறுதிகள், இதர அறிவிப்புகளின் படி 16 வாக்குறுதிகள் என்று 202 அறிவிப்புகள் வாக்குறுதிகளாக இன்றைக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது என்பதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ச்சியாக மறந்து இருக்கின்றார் என தெரிவித்தார்.

Categories

Tech |