லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மேலசிவகாமியாபுரத்தில் அழகுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகுராஜ் தனது தாயார் ராஜம்மாள் இழந்ததால் வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தாசில்தார் மைதீன் பட்டாணி 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது. இதனை விரும்பாத அழகுராஜ் உடனடியாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 2000 ரூபாய் பணத்தை அழகுராஜ் மைதீன் பட்டாணியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மைதீன் பட்டாணியை கையும் களவுமாக கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.