பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட 5 வார்டு உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் இதில் அ.தி.மு.க., பா.மா.க., சுயேச்சை உள்ளிட்டோர் உள்ள 5 பேருடைய வார்டுகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக வார்டு உறுப்பினர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக 5 வார்டு உறுப்பினர்களும் குற்றம் சட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையறிந்த வேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பா.ம.க, சுயேச்சை வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் பேரூராட்சி தலைவரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர், என் மீது பொய்யான குற்றசாட்டுகளை சுமத்தி ஆர்பாட்டம் நடத்துவதாக தெரிவித்தார். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.