ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறப்பு மருத்துவ வசதிகள் தொற்று நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் 35 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சை அரங்கு 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் முதல் நிலை, இரண்டாம் நிலையிலேயே கண்டறிந்து கேன்சர் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை மேற்கொள்ள பதிவேடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.
இதுவரை 49.79 லட்சம் பேர் “மக்களை தேடி மருத்துவம்” மூலம் பயனடைந்துள்ளனர். அதேபோல் இன்னுயிர் காப்போம், “நம்மை காப்போம் 48″ திட்டத்தில் 640 மருத்துவமனைகள் இணைந்துள்ளது. மேலும் அறுவை சிகிச்சை இயந்திரத்தை 35 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
அதேபோல் இந்த இன்னொரு காப்போம் திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் விபத்துக்கான சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால் தனியாக மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.