இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பொதுமக்களுக்கான தரிசனம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது.
இருப்பினும், மத வழிபாட்டுக் கோட்பாடுகள்படி அனைத்து நிகழ்வுகளும் பக்தர்களின்றி, வழிபாட்டுத் தலப் பணியாளர்கள் மூலம் நடைபெறவும், அதனை ஆன்லைனில் ஒளிபரப்பவும் எவ்வித தடையும் கிடையாது. மேலும், ஆடிப் பூரத்தையொட்டி ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளிலும் திருக்கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி பாத யாத்திரைக்குத் தடை:
அதேபோல, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி (ஆக 29-இல் கொடியேற்றம்) வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.