நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை டெல்லியில் குறைந்து வருகிறது. மேலும் பாசிட்டிவ் விகிதமும் குறைந்து வருகிறது. இதனால் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை ரத்து செய்யவும், ஒற்றை மற்றும் இரட்டைபடை முறையில் கடைகள் செயல்படும் முறையை ரத்து செய்யவும், அனைத்து கடைகளும் எல்லா நாட்களிலும் இயங்கவும், 50 சதவிகித ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்படவும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இது தொடர்பான பரிந்துரையை துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு, டெல்லி அரசு அனுப்பியது.
இந்நிலையில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை தளர்த்தும் டெல்லி அரசின் கோரிக்கையை ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஒன்றை மட்டும் இரட்டைப்படை முறையில் கடைகள் செயல்படும் முறையை ரத்து செய்யவும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் தாக்கமானது இன்னும் குறைந்தால் வார இறுதி ஊரடங்கை தளர்த்துவது பற்றி முடிவெடுக்கலாம் என்று ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்படும் முடிவுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.