வாலிபர் கற்களை வீசியதால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பராமரிப்பு பேருந்து ஒன்று நேற்று காலை அண்ணா பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 4 பராமரிப்பு ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாலிபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளார். இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. முன்னதாக அவ்வழியாக சென்ற 2 கார்கள் மீது வாலிபர் கற்களை வீசியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கற்கள் கார்கள் மீது விழவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபரின் உறவினர்களை வரவழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.