தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி நடூர் காட்டுவளவு குறிஞ்சிப்பாடி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் தீவட்டிப்பட்டி பகுதியில் கம்பி, சிமெண்ட் மொத்த வியாபார கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோபித் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு நேரத்தில் சந்தோஷ், பிரேம்குமார் இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு கடையை பூட்டினர்.
அப்போது சோபித்தும், சிறுவனும் தங்களுக்கு பணம் வேண்டும் என கேட்டனர். அவர்களுக்கு சந்தோஷ பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த 2 பேரும் கத்தியால் சந்தோஷை சரமாரியாக குத்தியுள்ளனர். இதனை பார்த்த பிரேம்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.அப்போது இரண்டு பேரும் பிரேம்குமாரை துரத்தி சென்றனர். அவர்களது அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த சோபித்தும், சிறுவனும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதற்கிடையில் படுகாயமடைந்த சந்தோஷ் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சந்தோஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சோபித் மற்றும் 15 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷுக்கு இலக்கியா என்ற மனைவியும்,4 வயதில் திவ்யன் என்ற மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.