சொத்தவிளை கடற்கரைக்கு சென்ற வாலிபர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் கீழமறவன்குடியிருப்பு சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் கிருஷ்ணகுமார்(24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பறக்கையில் இருக்கின்ற ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி வழக்கம்போல் கிருஷ்ணகுமார் பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிருஷ்ணகுமாரை தேடி வேலை செய்கின்ற கடைக்கு சென்று பார்த்தார்கள். அப்போது கடைக்காரர் அவர் உடல் நலம் சரியில்லாமல் காலையிலே விடுப்பு எடுத்து சென்று விட்டதாக கூறினார். ஆனால் கிருஷ்ணகுமார் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து கிருஷ்ணகுமாரின் நண்பர்களிடம் விசாரித்தபோது சொத்தவிளை கடற்கரையில் நின்று செல்பி எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து பெற்றோர்கள் கடற்கரைக்கு சென்று தேடிப் பார்த்தபோது அங்கு அவர் இல்லை. ஆனால் அவரின் பைக் மட்டும் கடற்கரையில் நின்றது. மேலும் அவர் கொண்டு சென்ற உணவு பையும், செல்போனும் இருந்தது. இதனால் அவர் கடலில் விழுந்து விட்டாரா? அல்லது வேறு எங்கேயாவது சென்றாரா? என்று சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து காணாமல் போன கிருஷ்ணகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.