தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் கஸ்தூரி வாசு. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,05,335 ஆகும்.
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பதும் தோட்ட தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். பூங்கா மற்றும் படகு இல்ல பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடைமடை பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இளநீர் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது சென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரசு கலைக்கல்லூரி உருவாக்க வேண்டும் என்றும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாவை மேம்படுத்தி தொழில் வளத்தை பெருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.