இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பலர் வேலை இழந்து தவித்தனர். அந்த வகையில் சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்தனர். இதில் சிலர் கிடைத்த வேலையை செய்தாலும், சிலர் வாய்ப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஏக்தா சர்மா கொரோனா பெருந்தொற்றின் போது வேலையில்லாமல் தவித்துள்ளார்.
ஹிந்தி சீரியல்களில் நடித்து ஏக்தா சர்மா 2 வருடங்களாக வேலையில்லாமல் தவித்து வந்த நிலையில், முதலில் தன்னுடைய நகைகளை விற்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இருப்பினும் சீரியல்களில் வாய்ப்பு கிடைக்காததால், வீட்டில் முடங்கி விடக்கூடாது என்பதற்காக தற்போது ஒரு கால் சென்டரில் வேலை பார்க்கிறார். சீரியல்களில் நடிக்கும் போது மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்த ஏக்தா தற்போது கிடைத்த வேலையை செய்து கொண்டு எளிமையாக வாழ்கிறார். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் படித்த படிப்பு மட்டும்தான் நமக்கு கை கொடுக்கும் என நடிகை ஏக்தா கூறியுள்ளார்.