சிவகங்கை கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சிவகங்கை மாவட்ட கழுகோர்கடை கிராமிய தப்பாட்டக் குழு சங்கத்தின் சார்பில் தப்பாட்ட கலைஞர்கள் 20 பேர் தப்பாட்டம் இசைத்து, ஆட்டம் ஆடி வந்தனர். அதன்பின் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, கிராம கோவில்களில் பங்குனி மாதம் முதல் திருவிழாக்கள் நடைபெறும்.
அந்த திருவிழாக்களின்போது நாடகமேடை நடத்தப்படுவதும், தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் வழக்கம். கொரோனா காரணமாக தமிழக அரசு கோவில் திருவிழாக்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வருடம் முழுவதும் சீசன்களில் மட்டுமே வருமானத்தை ஈட்டி வாழ்வை நடத்தி வரும் இசைக்கலைஞர்கள், மேடை நாடகக் கலைஞர்கள் கொரோனா தடையின் காரணமாக தற்போது தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.