கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. தற்போது அங்கு குளுகுளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் லேசான வெப்பம் நிலவியது. இதையடுத்து மாலை 5 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பிற்பகலில் மேக மூட்டங்கள் சூழ்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
மேலும் மிதமான மழை வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் பெய்தது. இதயத்தை வருடும் இதமான வானிலை வெப்பம் தணிந்து நிலவியது. அவ்வப்போது மலைமுகடுகளை மேக மூட்டங்கள் தரையிறங்கி முத்தமிட்டன. அதனைக் கண்டு சுற்றுலா பயணிகள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகள் அந்த சாரல் மழையில் நனைந்தபடி தரையிறங்கிய மேகமூட்டத்தின் பின்னணியில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தனர். மேலும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர்.