தெலுங்கானாவில் உள்ள பெண்களால் பதுகம்மா எனப்படும் மலர் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இது தெலுங்கானாவில் மகாளய அமாவாசை நாளில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து தெலுங்கானா பெண்கள் கடவுளை வழிபடுவார்கள். இதில் பதுகம்மா என்பதன் பொருள் “அம்மனே வருக” என்பதாகும். இவ்விழாவில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் கொண்ட மலர்களால் ஏழு அடுக்குகளாக கோபுரம் அமைக்கப்படுகிறது.
பின்னர் கலசத்தை தட்டின் நடுவில் வைத்து அதைச் சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி வைப்பர். இதனை அடுத்து இக்கலச தட்டை பொது இடத்தில் வைத்து பெண்கள் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் கொண்டாடுவார்கள். இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதுகம்மா விழாவில் நடனமாடிய வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது இவ்விழா ராஜ்பவனில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வகையில் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிற பெண்களுடன் இணைந்து பாரம்பரிய நடனம் ஆடி பதுகம்மாவை கொண்டாடினார்.