விஐபி படத்தால் நடிகர் தனுஷ் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. வேல்ராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
ஆனால் அந்த காட்சியில் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகம் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்த படத்தில் விதிமுறைகளை மீறி காட்சிகள் வைத்திருப்பதாக தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தனுஷுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது தொடர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.