விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கத்தில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு ரொமான்டிக் படம் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது துருவ் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மஹான் படத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.