விக்ரம்- துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரம் தனது மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சியான் 60 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு தொடர்ச்சியாக 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.