சிறையில் கைதி மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ராஜசேகர் என்பவர் அழைத்து வரப்பட்டார். இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல்நிலையத்தில் 3 வழக்குகளும், வியாசர்பாடி காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், சோழவரம் காவல்நிலையத்தில் 8 வழக்குகளும் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில் ராஜசேகர் மீது மொத்தம் 23 வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், சோழவரம் காவல்நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் ராஜசேகர் இருக்கிறார்.
இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, காவல்துறையினர் ராஜசேகரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பிறகு ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் ராஜசேகர் சந்தேக மரணம் அடைந்திருப்பதாக கூறி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களிடம் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி விசாரணைக் கைதி விக்னேஷ் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராஜசேகர் சிறையில் சந்தேக மரணம் அடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.