விசாரணை நடத்தி கொண்டிருந்த 2 போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆத்திகாடு பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளான ராமமூர்த்தி மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரும் ஆத்திகாடுக்கு சென்று குணசேகரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது குணசேகரன் விசாரணை நடத்த வந்த இரண்டு போலீசாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த 2 பேரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ராமமூர்த்தி மற்றும் அருணாச்சலம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குணசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.