லாரி சக்கரத்தில் சிக்கி சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் முகமது ரபீக்(38) என்பவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது ரபிக் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ்காரரான அபுதாகிர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு விசாரணை முடித்துவிட்டு இரண்டு பேரும் சோலூர் மட்டம் காவல் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கேர்பெட்டா செம்மண் முடக்கு பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த முகமது ரபீக் மீது தேயிலை தூள் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியது. இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அபுதாகிர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதுவின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.