கனடாவில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண்ணை தற்போது காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.
கனடாவில் உள்ள ரொறொன்ரோ என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் அமண்டா கிலன் கடந்த மாதம் மாயமானார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த 45 வயதுடைய கெடி அலி என்ற நபர் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளார். இதனால் உடனடியாக காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் மரணமடைந்தார்.
அதன் பின்பு அங்கிருந்து ஒரு பெண்ணின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. அந்த பெண் மாயமான அமண்டா கிலன் தான் என்று தெரியவந்திருக்கிறது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ஓர்சன் யார்க் என்ற 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இச்சம்பவம் குறித்த விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.