கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின் கூலி உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில் பேச்சுவார்த்தையின் வாயிலாக புதிய கூலி உயர்வு இறுதி செய்யப்பட்டது. 7 வருடங்களுக்கு பின் கூலி உயர்வு கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் விசைத்தறியாளர்கள் இருந்தனர். ஆனால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கொடுக்க வேண்டிய புதிய கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்து விட்டனர். இதன் காரணமாக வேறு வழியின்றி விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கு ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக 28 நாட்களாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம், இதர ரகங்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த தகவல் விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.