தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இருந்தவரை வாக்கு சதவீதத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. விஜயகாந்த் என்ற ஒற்றை நபரை நம்பி கட்சியில் இணைந்த பலர் விஜயகாந்த் கட்சிப் பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து சற்றே தள்ளி இருந்த போது வெளியேற தொடங்கினர். அதோடு தற்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தால் கட்சிப் பொறுப்பு மற்றும் நிர்வாகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிகளுக்கு தாவ தொடங்கினர். இதனை தொடர்ந்து தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து இறங்கு முகமாக மாறியது. அதோடு திமுக அதிமுக போன்ற பெரும்பான்மை கட்சிகளுக்கு போட்டியாக இருந்த தேமுதிக தற்போது இத்தனை மோசமான நிலைமைக்கு செல்லும் என தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில் அடுத்த கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தேமுதிகவின் தலைமை மாற்றம் குறித்த முடிவை பிரேமலதா விஜயகாந்த் செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல் தலைவராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்படுவார் எனவும் சிலர் கூறுகின்றனர். திமுகவில் கலைஞரின் உடல்நிலை மோசமான போது செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டது போல தேமுதிகவிலும் தற்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.