விஜயின் திரைப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார்.
இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இணையத்தில் படம் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றது. இத்திரைப்படத்தில் 50 வயது மதிப்புமிக்க கேங்ஸ்டராக நடிக்கின்றார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படம் கைதி பட பாணியில் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் ஸ்டைலில் உருவாக இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இதனால் இத்திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பினை ரசிகர்களுக்கு இடையே அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில் அண்மையில் நடிகர் ஜீவா, விஜய் பற்றி பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
நடிகர் ஜீவா தந்தையின் ஆர்.பி.சவுத்ரி குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்நிறுவனம் விஜயின் முதல் வெற்றி படமான பூவே உனக்காக, லவ் டுடே, திருப்பாச்சி போன்ற பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் திரைப்படத்தை மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்குமா? என ஜீவாவிடம் கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அது முடிவான பிறகுதான் எனக்கே தெரியவரும் என கூறியுள்ளார். இதனால் தளபதி 67 திரைப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.