நடிகர் விஜய் பற்றி இயக்குனர் பாலுமகேந்திரா கூறியதை இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் ஆரம்ப காலத்தில் பல தோல்வி, அவமானங்களை சந்தித்து படிப்படியாக தனது விடா முயற்சியுடன் போராடி பின் வெற்றி கண்டார். இவர் தமிழ் சினிமா உலகில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் அவருக்கு வெற்றியை தரவில்லை. அதன் பின் அவர் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இதையடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றது. முதலில் காதல் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் பின் கமர்சியல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் வெற்றி கண்டார். தற்பொழுது அடுத்தடுத்து கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தநிலையில் அண்மையில் இயக்குனர் சீனு ராமசாமி விஜய் பற்றி இயக்குனர் பாலுமகேந்திரா கூறியதை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, லவ்டுடே, காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் நானும் பாலுமகேந்திராவும் விஜய்யின் வீட்டின் வழியாக காரில் சென்று கொண்டிருந்த பொழுது விஜய் வீட்டின் முன்பாக அவரைக் காண்பதற்காக ரசிகர்கள் பலர் இருந்தனர். அவர்களை பார்த்த பாலுமகேந்திரா என்னிடம் விஜய்க்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள் என தெரியுமா? என்று கேட்டார். அதற்கு நான் அவரின் படங்கள் வெற்றி அடைவது தான் என கூறினேன். அதற்கு பாலுமகேந்திரா, இல்லை விஜயின் முகம் பூனை குடும்பத்தை சார்ந்தது. இந்த முக அமைப்பை உடையவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்ப்பார்கள் என கூறினார்.