திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய சினிமா படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சில நாட்களாக நடைபெற்றது. இதனை காண்பதற்காக பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் நெருக்கமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் விஜய்சேதுபதி சினிமா படக்குழுவினருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி அன்றும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதனை காண்பதற்காக முககவசம் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்த பத்திரிக்கையாளர்கள் சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவர்களை சினிமா படக்குழு பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சினிமா பட குழுவினருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பத்திரிக்கையாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் நடிகர் விஜய் சேதுபதி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதற்கும் அவர்கள் அசைவு கொடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வடக்கு காவல் துறையினர், மேற்கு தாசில்தார் அபுரிஸ்வான் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நடிகர் விஜய்சேதுபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் படக்குழுவினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.