நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு அரவிந்து சீனிவாஸ் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் முகநூலில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கேட்ட நடிகர்கள் விஜய், சிம்பு மற்றும் தமிழக அரசுக்கு அரவிந்து சீனிவஸ் என்ற மருத்துவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கொரோனாவை எதிர்த்து போராடிவரும் நாங்கள் அனைவரும் சோர்ந்துபோய் உள்ளோம். கொரோனாவால் இன்னும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி என்பது பணத்துக்காக உயிர்களை பலி கொடுப்பது போலாகும்” என்று குறிப்பிட்டு இது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.