நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு குறித்த 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரதில் நடிக்கவிருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாதை அடுத்து விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவிப்பதாக எண்ணி நபர் ஒருவர் அவரது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில் ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்டிருந்தர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது சைபர் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.