நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை காண கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தை இயக்குனர் ஜனநாதன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட தகவல் அறிந்த கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பு தளத்திற்குள் குவிந்துள்ளனர்.
இந்த கிராமத்தில் பத்து நாளாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் விஜய் சேதுபதியை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பரவலால் படப்பிடிப்பு தளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அரசு நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியை காண வந்த மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் , முகக் கவசம் அணியாமல் படப்பிடிப்பு தளத்தில் குவிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.