விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டம் கால தாமதம் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் என்ற திட்டத்தை வருகின்ற 2022ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.அதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.மேலும் அந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து இருபத்தைந்து விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர்.அந்த நான்கு பேருக்கும் ரஷ்யாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பயிற்சி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டம் கால தாமதம் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி தோய்வடைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டம் தாமதமாகலாம்”என்று அவர் கூறியுள்ளார்.