நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தபடும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நவம்பர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒரு வாரம் பாதயாத்திரை நடைபெறும் என்றும், மாநில காங்கிரஸ் கமிட்டிகள் அந்தந்த மாநிலங்களில் பாதயாத்திரை ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.