Categories
மாநில செய்திகள்

“விடியல் என்று சொல்லிவிட்டு இருட்டில் வைத்திருக்கிறீர்களே” இதுதான் உங்கள் நியாயமா…..? திமுக அரசுக்கு கோரிக்கை….!!!!

சென்னையில் ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்றும், பணி மாறுதல் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த 181-வது வாக்குறுதியை மறந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பணிக்காலம் நீட்டிப்பு மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு இருக்கிறார். இது எல்லாம் பணி நிரந்தரம் செய்தாலே வந்துவிடும். பகுதி நேர ஆசிரியர்களை பணி  நிரந்தரம் செய்யாமல் வைத்திருப்பதால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 10,000 ரூபாய் சம்பளம் தான் தற்போது வரை வழங்கப்படுகிறது.

திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 16 மாதங்கள் ஆகியும் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி கொடுக்கிறார்கள். அப்படியென்றால் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை பார்க்கும் எங்களின் கதி என்ன? கடந்த 11 வருடங்களாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அது பலனற்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு எங்களை இருட்டில் தவிக்க விட்டு விட்டார்கள். நாங்கள் இருட்டில் தவிப்பதை முதல்வர் இனியாவது மாற்ற வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த 16 மாதங்களில் நாங்கள் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு இதுவரை விடிவு காலம் பிறக்கவில்லை. கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை கொடுத்ததால் தான் நாங்கள் பலமுறை மனு கொடுத்துள்ளோம். உங்களிடம் கொடுத்த மனுக்களுக்கு வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்றாவது பணி நிரந்தரம் என்ற நல்ல செய்தியை தமிழக முதல்வர் கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |