இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை என்று கூறியுள்ளார்.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த போரில் உயிர்நீத்த இலங்கை ராணுவ வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் போர் வீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராணுவ மந்திரியாக இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, “நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கின்ற ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது. நமது படைகள், மனிதாபிமான அடிப்படையில் போரை முடித்து, அமைதியை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த போரில் வெறுப்புணர்வோ, ஆத்திரமோ அல்லது பழிவாங்கும் எண்ணத்தில் யாரும் இருந்ததோ இல்லை. இந்த மாதிரி அமைதி உருவாக்கப்பட்ட நாட்டில் இனவெறிக்கோ, எந்தவகையான பயங்கரவாதத்துக்கோ இடமில்லை. இதுதான் இலங்கையின் தனித்த பண்பாடு.
வெளிநாட்டு குழுக்களை முறியடிக்க வேண்டும். மேலும் தற்போது நாம் சந்தித்து வரும் சூழ்நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி, அரசியல், சமூக கலவரமாக மாறிவிட்டது. எந்த சூழ்நிலையிலும், நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் கொள்கையை கைவிட மாட்டோம். பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும், தனிநபர்களும் தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி, தேச பாதுகாப்பை குழிதோண்டி புதைக்க முயற்சிப்பதில் சந்தேகமே இல்லை. நாம் ஒன்று சேர்ந்து அதை முறியடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.