முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீப்பனசத்திரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் தேர்தலின் போது அ.தி.மு.க வினர் மீது போடப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கியுள்ளார். இவர் அ.தி.மு.க வின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலிருந்து இதுவரை எதிர்க்கட்சி மீது எந்த ஒரு பொய் வழக்கும் போடவில்லை. இதன் காரணமாகவே எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளனர்.
அதன்பிறகு செல்வி ஜெயலலிதா அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு நல திட்டங்களை செயல்முறை படுத்தியுள்ளார். இதன் காரணமாகவே செல்வி ஜெயலலிதா அவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதனால் அ.தி.மு.க கட்சி தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இன்று தி.மு.க கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றாலும் மக்களுக்கான நலத் திட்டங்களை அ.தி.மு.க அரசால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் சண்முகம், கைத்தறி பிரிவு செயலாளர் நல்லசாமி, மாநகர பிரதிநிதி ஆஜம், மாணவர் அணி செயலாளர் நந்தகோபால், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் கவுன்சிலர்கள் கே.எஸ் கோபால், நாச்சிமுத்து, பெரியார் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் வீரக்குமார் மற்றும் ஜெயராமன், பகுதி செயலாளர்கள் பழனிச்சாமி, ஜெகதீஷ், மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் போன்ற பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.