வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி போலீசாகவும் நடிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அடர்ந்த சத்தியமங்கலம் காடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் பல கட்டங்களாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இல்லாததால் தற்காலிகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் கிராமம் போன்ற பிரம்மாண்ட செட் ஒன்றும் இறுதி கட்டமாக நடைபெறும் இந்த படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான சண்டை காட்சி ஒன்றும் இந்த திரைப்படத்தில் படமாக்கப்பட உள்ளது. இதற்காகவே பிரபல சண்டை கலைஞர் பீட்டர் ஹெய்ன் தலைமையில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் படப்பிடிப்பு விரைவில் நிறைவுற்று அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.