விடுதி உரிமையாளரை தாக்கி பெண்களை கடத்தி சென்ற வழக்கில் 3 பேரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் செல்வம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹரிஹரன் மற்றும் செல்வம் ஆகியோரை தாக்கி அவர்களிடமிருந்த லேப்டாப்கள், செல்போன்கள், சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகும் பெட்டி, 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்தனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் பணியில் இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நர்கீஸ் மற்றும் மகேந்திரா திர்வால் ஆகிய 2 பெண்களையும் கடத்தி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது ஆசிக், சுதீர் குமார், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் கடத்தப்பட்ட 2 பெண்களையும் பத்திரமாக மீட்டனர்.