மாணவிகள் விடுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் இருக்கும் தலக்குளத்தில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கான தனியார் விடுதியும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாணவிகள் தங்கும் இந்த விடுதியில் மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி வீசி உள்ளனர். இதனால் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
இந்த மாணவிகளின் அலறல் சத்தத்தை கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக விடுதிக்கு வந்துள்ளனர். இவர்களைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து மருத்துவர் ஆறுமுகம் பிள்ளை இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.