தனியார் தாங்கும் விடுதியில் வடமாநில இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு வாலிபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவில் அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் என்ற வடமாநில வாலிபர் வடமாநில இளம் பெண் ஒருவருடன் அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கிய நிலையில் கடந்த 24ஆம் தேதி யோகேஷ் மட்டும் விடுதியிலிருந்து அறையை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதற்குப்பின் 2 நாள் ஆகியும் யோகேஷ் விடுதிக்கு வரவில்லை அந்த இளம்பெண்ணும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் உடனடியாக ராமேஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் நல்லசாமி மற்றும் காவல்துறையினர் வடமாநில வாலிபர் யோகேஷ் தங்கிய விடுதியின் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது யோகேஷுடன் வந்த வடமாநில இளம்பெண் வாய், மூக்கில் ரத்தங்களுடன் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த தடயங்களையும் சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து உயிரிழந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிய யோகேஷின் செல்போன் எண்ணை வைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.