Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள்…. திடீரென ஏற்பட்ட உடல் உபாதைகள்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஜமீன் கொரட்டூரில் தனியார் கப்பல் பொறியியல் கல்லூரி வளாகம் உள்ளது. அந்த கல்லூரி வளாகம் தற்போது செயல்படவில்லை. இதனால் அங்குள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாடகைக்காக விடப்பட்டுள்ளது. இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 2000-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த 116 பெண்களுக்கு திடீரென ஏற்பட்ட வாந்தி, பேதி, மயக்கத்தை கண்டு சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெள்ளவேடு காவல்துறையினர், பொது சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதன் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்கள் சாப்பிட்ட உணவிலுள்ள நச்சுத்தன்மையால் வாந்தி, பேதி ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஏராளமான பெண் ஊழியர்கள் அவர்களது பெற்றோரின் அறிவுரையை கேட்டு சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். அங்கிருக்கும் சக ஊழியர்களுக்கு 6 மருத்துவ குழு அமைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று காலத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல்தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை விடுதியில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளவேடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் ஊழியர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கிடையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 116 பெண் ஊழியர்களில் 56 பேர் மட்டும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களுக்கு அரசு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விடுதியில் சாப்பிட்ட உணவால் பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதால் அதனை ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உரிமம் இல்லாமல் செயல்படும் விடுதிகளை தடை செய்வதுடன் அதனை நடத்தி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து எவ்வித தகவலும் அளிக்காததால் 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அமைச்சர், மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Categories

Tech |