ஈரோடு மாவட்டத்திலுள்ள சோலார் லக்காபுரம் பகுதியில் சிவபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொற்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அவருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இன்னும் 4 மாதங்கள் மட்டுமே கல்லூரி படிப்பு இருக்கிறது. எனவே படித்து முடித்துவிட்டு வீட்டிற்கு வா என அறிவுரை கூறி பெற்றோர் மகளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 6- ஆம் தேதி கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த பொற்கொடி மன உளைச்சலில் விஷம் குடித்து பெற்றோரிடம் எதுவும் கூறாமல் மறைத்து விட்டார். அதன் பிறகு அவரது உடல்நிலை மோசமானது கடந்த 20-ஆம் தேதி மகள் விஷம் குடித்ததை அறிந்த பெற்றோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொற்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.