தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி செல்லும் பிரதான சாலையில் ஒரு தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. அங்கு விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, அரியலூர் காவல்துறையினர் இரண்டு பெண் காவல்துறையினருடன் ஒரு தனிப்படை அமைத்து விபச்சாரம் நடக்கும் அந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நான்கு பெண்களை இரண்டு ஆண்கள் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அந்த நான்கு பெண்களையும் காவல்துறையினர் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் விபசார தொழில் செய்வதற்கு கர்த்தாவாக செயல்பட்டு வந்த வெற்றி கண்ணன் மற்றும் தரகராக செயல்பட்ட சேகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அந்த தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் அந்த விடுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்று அந்த விடுதியை பூட்டி சீல் வைத்துள்ளனர்.