12ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியார் பள்ளி விடுதியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி தங்கி 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மாணவிக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு கால் முறிந்துள்ளது. இதுதொடர்பாக விடுதி காப்பாளர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இத்தகவலின் பேரில் விரைந்து வந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி வனிதா ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் காவல்துறையினர் மாணவி என்ன காரணத்திற்காக விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும், மேலும் அவராக குதித்தாரா? அல்லது அவரை வேறு யாராவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்களா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்பின் மாணவியை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.