சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். இங்கு படகு சவாரி, நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி மற்றும் வன பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விடுமுறை நாட்களுக்கு ஆத்தூர், பெரம்பலூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக கல்வராயன் மலை தொடர்ச்சியில் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 5 நபர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்கள் உடனே தப்பிப்பதற்காக நீர்வீழ்ச்சியின் இடதுபுறமாக உள்ள பாறை மீது ஏறியபோது பாறை வலுக்கியதால் 2 வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். அதன்பிறகு இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சென்று உயிர் பிழைத்தனர். இதையடுத்து ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்காலியமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.