விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நிறைய உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல் மே மாதம் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. விடுமுறை நாளான நேற்று சனிக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் சூரிய உதயம் பார்க்க அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய உதயமான காட்சி சரிவர தெரியவில்லை.
அதன் பின் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் காலையில் ஆனந்தமாக குளித்தனர். இதனையடுத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பின் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்கு படகுத்துறையில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தார்கள். கடந்த ஒரு வாரம் படகு போக்குவரத்து கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக தாமதமாக இயங்கியது. ஆனால் நேற்று சரியாக 8 மணிக்கு படகு போக்குவரத்து ஆரம்பித்தது.
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகில் ஏறி விவேகானந்தர் மண்டபம், காந்தி நினைவு மண்டபம் காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் இருக்கின்ற தமிழன்னை பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா அனைத்து இடங்களுக்கும் சென்று சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். கடற்கரையில் சுற்றுலா காவல்துறையினரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.