சரக்கு வேனில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் ஜெல்சன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் ஜெல்சன் தனது நண்பர்களோடு விசேஷ வீடுகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தது வழக்கம். இந்நிலையில் கேட்டரிங் சர்வீஸ் செய்வதற்காக ஜெல்சன் தனது நண்பர்களுடன் சரக்கு வேனில் கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ராயவரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு சரக்கு வேன் ஜெல்சன் பயணம் செய்த சரக்கு வேன் மீது உரசியது. இதனால் கை உடைந்து சரக்கு வேனில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஜெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.